பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.!
இரண்டுநாள் சுற்றுப்பயணமாக வாரணாசி சென்றுள்ள பிரதமர் மோடி, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்களுடன் 6 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை மேற்கொண்டார்.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தை புதுப்பிக்க நடைபெற்ற முதற்கட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளன இதில் 339 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தொடர்ந்து, கங்கை ஆற்றில் படகு மூலம் சென்று கங்கை ஆரத்தி நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தார்.
பின்னர் காசி கோயிலில் நடைபெற்ற லேசர் ஒளிக் கண்காட்சியை மோடியும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கண்டு களித்தனர்.
தொடர்ந்து காசி கோயில் அருகே உள்ள கடை வீதிகளில் சுற்றிப் பார்த்த மோடி, அங்கிருந்த கடை உரிமையாளர்களிடம் நலம் விசாரித்தார். அப்போது அவருடன் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் உடனிருந்தார்.
பின்னர் வாரணாசி ரயில் நிலையம் சென்ற பிரதமரும், யோகி ஆதித்யநாத்தும் அங்கு முடிக்கப்பட்ட கட்டுமானப்பணிகளை சுற்றிப் பார்த்தனர்.
முன்னதாக பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்களுடன் 6 மணி நேரத்திற்கும் மேலாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். மாலை 6 மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டம் நள்ளிரவில் முடிந்தது.
இதில் 12 மாநில முதலமைச்சர்களும், 9 மாநில துணை முதலமைச்சர்களும் பங்கேற்றனர். அப்போது, மக்களின் குறைகளைக் கண்டறிந்து, வளர்ச்சிப் பணிகளில் மேலும் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
Comments